---------------------------------------------------------------------------------
கரும்பச்சை:
---------------------------------------------------------------------------------
காலை 9:05. மழை நாளில் வேறு வழி இல்லாமல்,
கம்பியின் ஈரத்தைப் பிடித்தபடி உட்கார்ந்து பிரயாணம்.
என் பெயர் சந்தியா. டைப்பிஸ்ட் . என் வயதுடைய
பெண்களுக்கு பொதுவாக கல்யாணம் ஆகி
ஒன்றிரண்டு குழந்தைகள் பள்ளிக்குப் போகும் வயது.
நான் இன்னும் பிரம்மச்சாரி . இந்த வார்த்தை
பெண்களுக்கு உண்டா என்று தெரியவில்லை,
அப்படி என்றால் அதான் நான். சம்பிரதாய டிக்கெட்
வாங்கல், மாமி பக்கத்தில் வந்து உட்கார்வது, சிகப்பு
டி ஷர்ட் சைட் அடிப்பது எல்லாம் தினம் செல்லும்
நாட்களில் மற்றொரு நாள் என்பதை நினைவு செய்தன.
மாமி எழுந்து போன அடுத்த நிமிடம் ஒரு நடுத்தர
வயதுடைய பெண், கைக்குழந்தையுடன் என்னருகில்
உட்கார்ந்தாள்.
"மேடம் கொஞ்சம் புடிங்க" என்று குழந்தையைக்
கொடுத்து டிக்கெட் வாங்க பர்சை எடுத்தாள்.
"நான் எடுத்தாச்சு" என்று பின்னால் இருந்து குரல்
கேட்டது. எங்கேயோ கேட்ட குரல் !!!
ஆம் ... அவன் தான்.
பிரபு. என்னால் நம்ப முடியவில்லை. என் பிரபு.
அவன் என்னைப் பார்க்கவில்லை. நான் அவனை
ரசித்தேன் என்று சொல்ல முடியாது, ஆனால்
உற்றுப்பார்த்தேன். அதே நிறம், பாதி வழுக்கை,
குழந்தை அழுதாள். என்னிடமிருந்து அதை
வாங்கினாள் அந்த பெண்.
அந்த பத்து நிமிடம் அவனை நினைத்து லேசாக
அழுது கொண்டு என் கல்லூரி நாட்களை
அசை போட்டேன்.
"சீக்கிரம், எறங்கு, எவ்வளவு நேரம்?" என்றான்.
அவள் என்னிடம் 'தாங்க்ஸ்' என்னும் பொழுது
அவன் என்னைப் பார்த்து விட்டான்.
"வாவ் வாட் எ சர்ப்ரைஸ்" என்றான்.
"சந்தியா நீயா???"
நான் கண்களைத் துடைத்துக் கொண்டு கை குலுக்கினேன்.
பழைய வலிமை அந்த குலுக்களில் மிச்சம் இருந்தது.
"சந்தியா , நான் அவசரமா ஆஸ்பிடல் போகணும்,
குழந்தைக்கு உடம்பு சரி இல்ல, இது தான் என்
அட்ரஸ். சனிக்கிழமை மத்தியானம் கண்டிப்பா வா.
பை" அவசரத்தில் பேனாவை என்னிடமே கொடுத்துப்
பறந்தான் என் பிரபு, இப்படி இன்னமும் சொல்ல
முடியுமா?
இல்லை ... அந்த பிரபு. ஆனால் ஒரு காலத்தில்
அவன் 'என் பிரபு'. என் காலேஜ் நண்பன், காதலன்,
கற்பனைக் கணவன்.
அந்த காலேஜ் வாழ்கையில் எத்தனை நாட்கள்
கண்ணீரில், சிரிப்பில், காதலில், கோபத்தில்,
சமாதானத்தில் அவனுடன் இனிமையாக கழிந்தன.
ஆனால் அதன் பின் ... இந்த பத்து வருடங்கள்
காலண்டருக்கு மட்டும் தான் தெரியும்,
நினைவுகளுக்குத் தெரியாது.
இன்று ஆபீசிக்கு லீவ் போட்டு விட்டு என்
ரூமுக்குள் நுழைந்தேன். யாரும் இல்லாத
என் ரூமில், நானும் சீலிங் பாணும் அழுது
கொண்டோம்.
கொஞ்சம் தொப்பை, ஒன்றிரண்டு நரைத்த
முடி, அதற்குள்ளா ... நம்ப முடியவில்லை.
அவன் சிரிப்பில் பெரிய செயர்க்கைத்தனம்,
என் அன்றாட வாழ்கையைப் போல். ஆனால்
பெரிய வித்தியாசம், அழகான பெண் குழந்தையுடன்
ஒரு மனைவி சகிதமாக கச்சிதமான வாழ்க்கை.
நான் எதிர்பார்த்த காட்சி இன்று பார்த்தே விட்டேன்.
காதல் மிகப்பெரிய மடத்தனம் என்று பல
படங்கள் பார்த்தும் புத்தி வரவில்லை, பாடம்
தான் கற்றுத் தந்தது நான் வாழ்ந்த இந்த பத்து
வருடங்கள். வழக்கமான அப்பா, அம்மா,
குடும்பம் , ஜாதி காரணமாக நாங்கள்
பிரிக்கப்பட்டோம் .
ஒரு வேலை குடும்பத்தாரிடம் கேட்டுத் தான்
காதலிக்கனுமோ? சொல்லப் போனால் ,
அவன் குடும்பத்துல எவ்வளவு பேர் இருக்கிறார்கள்
என்று கூட தெரியாது. பொல்லாத காதல் !!!
அவனை இப்படி நான் ஒரு நாள் பார்ப்பேன்
என்று தெரியும். ஆனால் பார்த்த பின் இப்படி
இன்னமும் அழுது கொண்டிருப்பேன் என்பது
எனக்கே புதிது. கடைசியாக அவனைப்பார்த்தது
சென்ட்ரல் ஸ்டேஷனில். அன்று என்னை விட
அதிகம் அழுதது அவன் தான். வேலை கிடைத்து
டெல்லி போனான். அதன் பிறகு ஒரே ஒரு
இன்லாண்ட் லெட்டர், இரண்டு மூன்று சுமார்
கவிதைகள். பின் அதுவும் இல்லை.
எனக்கு கல்யாணம் பிடிக்கவில்லை. என்
பெற்றோரும் இப்பொழுது இல்லை. பொதுவாக
இந்த நிமிடத்தில் எனக்கு கல்யாணம் செய்து
வைக்க யாரும் இல்லை, ஏன், நானே அதற்கு
உடன்படமாட்டேன்.
ஆனால், பிரபு ... அவன் கொடுத்த பேனா
என்னிடம் இருந்தது. பாதி இங்க் காலியான பேனா,
என்னைப் போல. கரும்பச்சை.ஆ ... எனக்கு
பிடித்த கரும்பச்சை. ஒரு வேலை என்னை
மறக்கவில்லையா ... கண்டிப்பாக இல்லை,
அந்த குழந்தை ஞாபகத்திற்கு வந்தாள், அவன்
என்னை மறந்து விட்டான் என்பதற்கு அதுவே
ஒரு சாட்சி.
அவன் எழுதிய அந்த ஒரே லெட்டரில் தனக்கு
சத்தியமாக இந்த ஜென்மத்தில் இன்னொருத்தியுடன்
வாழ்க்கை இல்லை என்றிருந்தான். மறுபடியும்
அந்த குழந்தை முகம் நினைவுக்கு வந்தது. அவன்
ஜாடை ... படுபாவி ... துரோகி ...என்று பல
வார்தைகளில் அவனை திட்டினேன், அழுதேன் ...
இன்று ஒரு வித்தியாசமான நாள் தான்.
சனிக்கிழமை. 'துரோகி' என்று திட்டிய
அவனைப் பார்க்க சீக்கிரமே எழுந்து பஸ் பிடித்து
கிளம்பினேன். கூட்டம் குறைவு தான் பஸ்ஸில்.
டி நகர் வந்தது. அடுத்து ஆட்டோ.
வெள்ளை சுண்ணாம்பு வீடு வந்தது.
"வாங்க " அதே பெண். தூளியில் குழந்தையைப்
படுக்க விட்டாள்.
"இப்ப தான் தூங்கினா ... "
"பிரபு இல்லையா?"
"வெளில போயிருக்காரு ... வந்திடுவாரு"
ஹாலில் அவன் அழகான கோட்டில் சிரித்துக்
கொண்டு ஒரு போட்டோ. இன்னமும் ரசிக்க
விருப்பம், அதற்குள் "இந்தாங்க காபி. நீங்க
வருவீங்கன்னு சொன்னாங்க, அதான் முன்னமே
போட்டுட்டேன்"
என்று என் கவனத்தைக் கலைத்தாள்.
கிராமத்து பெண், ஒடிசலான தேகம், மாநிறம்,
அங்கங்கே சுருக்கங்கள், மொத்தத்தில் எனக்கு
எந்த விதத்திலும் ஈடு இல்லை.
"கொழந்தைக்கு என்ன"
"ஒரு வாரமா இருமல் ... கேக்கவே இல்லை.
கவர்ன்மன்ட் ஹாஸ்பத்திரில எங்க ஒழுங்க
கவனிக்கறாங்க? ஏதோ பச்சைல ரெண்டு,
மஞ்சள்ள ரெண்டுன்னு கொடுக்கறோம்.
இன்னும் நின்ன பாடில்ல. "
"ஏன், வேற நல்ல ஹாஸ்பிடலுக்கு போகலாமே?"
"போலாம்மா ... அதுக்கெல்லாம் எங்க போறது?"
பெருமூச்சு விட்டாள்.
அவள் பணத்தைத் தான் சொல்கிறாள் என்று
புரிந்தது. சுற்றிப் பார்த்தேன். ஒரே ஒரு பிரம்பு
நாற்காலி. பழைய டி வீ. ரெண்டு சார், கிழிந்த
சோபா. பிரபு ஒரு சராசரி வாழ்க்கை வாழ்கிறான்
என்று புரிந்தது. ஒரு வேலை எனக்குச் செய்த
துரோகமோ?. உள்ளுக்குள்ளே லேசான குரூர
மகிழ்ச்சி ... "சே சே ... எனக்கு ஏன் இப்படித்
தோணுது?"
"சரிம்மா, என்ன சாப்பிடறீங்க?"
"அவர் எங்க வேலை செய்யறாரு"?
"ஈபீல வேலை. லைன் மேன். பெருசா
வருமானம் இல்லை. வாங்கற சம்பளம்
வாடகைக்கும் மலிகைக்குமே சரியா இருக்கு.
இதுல கொழந்த வேற" சொல்லிவிட்டு தூலியை
இரண்டு முறை ஆட்டினாள்.
"ஏதோ அண்ணன் ஒத்தாசையா இருக்காரு.
ஆனா அவரையும் எவ்வளவு நாள் தான்
செரமம் பண்றது ... தெய்வம் அவர்.
எனக்காக கல்யாணம் கூட செய்துக்கல"
என்று லேசாக கண்ணீரைத் துடைத்தாள்.
"யார சொல்லறீங்க"? என்றேன்.
"அதாங்க ... எங்கண்ணன் பிரபு "
என்று சுவற்றில் இருந்த போட்டோவைக்
காட்டினாள்.
அதில் லேசாக சிரித்துக் கொண்டிருந்தான்,
கரும்பச்சையில் சட்டை பாண்ட் போட்டிருந்த
என் பிரபு.
Friday, July 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
very nice story.............. i like it
Post a Comment